Monday, November 20, 2006

தமிழீழம் அதன் அநிய படையெடுப்புகளும் அதன் இலாப நட்டமும்

இலங்கை என்று அழைக்கப்பட்ட நாட்டிலே ஐரோப்பியர் வரமுன்னர் சுதந்திரமாக இயங்கிய மூன்று இராச்சியங்கள் இருந்தன.கண்டி, கோட்டை,யாழ்ப்பாணம் என்பனவே அவை. யாழ்ப்பாண இராச்சியம் என்பது யாழ்ப்பாணப் பகுதியையும், தீவுப் பகுதிகளையும், மன்னார், முல்லைத்தீவுப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. 1619ம் ஆண்டு யாழ்ப்பாணம் அடிமைப்படுத்தப்பட்டது. அதாவது போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இவ்வாறு எமது தமிழீழப் பகுதி அந்தியரிடம் அடிமைப்படுவதற்கு காரணம் என்ன? 15ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் பல புதிய மாற்றங்கள் தோன்றின. கொலம்பஸ், வஸ்கொடகாமா, மகலன், போன்ற கடலோடிகள் தென்னமரிக்க, ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கும் புதிய கடல் பாதைகளைக் கண்டு பிடித்தனர். இதன் மூலம் இந்நாடுகளிடமிருந்த செல்வங்களையறிந்து கொண்ட ஐரோப்பிய நாடுகள், வணிகம் செய்வதற்காக வருவது போல் வந்து இந்த நாடுகளை அடிமைப்படுத்தினர் இவ்வாறு போர்த்துக்கல், ஒல்லாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து, போன்ற நாடுகள் 3ம் உலக நாடுகளை அடிமைப்படுத்தின. அதாவது தமது நலனுக்காக அப்பொழுது 3ம் உலகநாடுகள் என்று அழைக்கப்படும் ஆசிய, ஆபிரிக்க, தென்னமரிக்க (இலத்தீன் அமெரிக்கா) நாடுகளை அடிமைப்படுத்தி ஆண்டமையே ஏகாதிபத்தியங்கள் எனப்படும் இவ்வாறு அடிமைப்படுத்தப்பட்ட நாடுகள் குடியேற்ற நாடுகள் என்று அழைக்கப்படும்

ஆங்கிலேயரின் ஆட்சிக்காலம் ( 1796-1948).
தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் ஆங்கிலேயருடைய ஆட்சிக்காலம் இன்றுவரை மாறாத தாக்கங்களை ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஆங்கிலேயர் தாம் அடிமைப்படுத்திய நாடுகளில் அங்கு வாழும் மக்களிடையே வேற்றுமைகளை உருவாக்கி பிரித்தாளும் தந்திரத்தின் அடிப்படையில் ஆண்டமைக்கு இலங்கையும் ஓது உதாரணம். ஆங்கிலேயர் இலங்கையை விட்டுச் சென்றபொழுது அரசியல் அதிகாரத்தை சிங்களவரிடமே ஒப்படைத்துச் சென்றதால் எமது மக்கள் இன்று போராட வேண்டி உள்ளது. அவர்கள் இங்கு புகுத்திய பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை இறுதியில் தமிழ் மக்களுக்கு பெரிய நாசத்தை விளைவித்தது. தமிழ் நாட்டிலிருந்து இலட்சக்கணக்கான மக்களைக் கொண்டு வந்து குடியேற்றி அவர்களையும் இறுதியில் சிங்களவர் காலடியில் விட்டுச் சென்றனர். 1948ம் ஆண்டின் பின் பதவிக்கு வந்த சிங்களக் கட்சிகள் இனவாதம் பேசுவதற்கு ஒரு சில தமிழர்கள் ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவிகளில் இருப்பதையும் மலையக மக்கள் கண்டிச் சிங்களவர்களுடைய இடங்களைப் பறித்துவிட்டதாகவும் இனவாதக் கூச்சல் எழுப்பி ஆட்சி செய்வதற்கும் ஆங்கிலேயர் வழிவகுத்தனர். ஆங்கிலேயர் 1833ம் ஆண்டு கோல்புறூக் என்பவரின் பரிந்துரையின் படி இலங்கை முழுவதையும் ஒரே நிர்வாகத்தின் கீழ்க் கொண்டுவந்தனர். முதலில் 5 மாகாணங்களாவும் பின்னர் 7 மகாணங்களாகவும் தமது நிர்வாக வசதிக்கேற்ப பிரித்தனர். இதன் பின்னர் மெல்ல மெல்ல ஒரு புதிய ஆட்சி முறையையும் இங்கு புகுத்தினர். அதற்கு வசதியாக ஆங்கிலக் கல்வியை கிறிஸ்தவ மிசனரிமாரின் உதவியோடு இங்கு புகுத்தினர். காலத்துக்கு காலம் மாற்றங்களைச் செய்து தரம் புகுத்திய முதலாளித்துவ பொருண்மிய முறைக்குப் பயன்படுத்தத்தக்க வகையில் ஒரு உள்நாட்டு மத்திய வகுப்பைத் தோற்றுவித்தனர். இதன் பயனாக படித்த பணமுள்ள தமிழ், சிங்கள உயர் குடியினரை மெதுவாக ஆட்சிப் பொறுப்புக்களில் பயிற்றுவிக்கத் தொடங்கினர். தொடக்கத்தில் கரையோரங்களிலே அங்கில மிசனரிமாரின் செல்வாக்கு காரணமாக கரையோர உயர்குடியினரே ஆங்கில அரசியலில் பங்கெடுத்தனர். தொடக்கத்தில் அதிக கல்வியும் தகுதியும் பெற்ற யாழ்ப்பாணத் தமிழர்கள் முன்னணி வகித்தனர். 1916ம் ஆண்டு படித்த இலங்கையர் தெரிவுக்கான தேர்தலில் பொன்னம்பலம் இராமநாதன் என்பவர் சாதி குறைந்தவர் என்ற கருதப்பட்ட சிங்களவரைத் தோற்கடித்தார். இதுபோலவே 1919ம் ஆண்டு இலங்கையருக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. இதனுடைய முதல் தலைவராக பொன்னம்பலம் அருணாசலம் விளங்கினார். தொடக்கத்தில் எவ்வாறு இரு இனத்தைச் சேர்ந்த தலைவர்களும் ஒன்றாகச் செயற்பட்டாலும் 1920களின் பின்னர் தமிழ்த் தலைவர்கள் தமது கோரிக்கைகளைச் சிங்களத் தலைவர்கள் புறக்கணித் தொடங்கவே தேசிய காங்கிரசில் இருந்து விலகத் தொடங்கினர். 1915ம் ஆண்டு இலங்கையின் முதல் இனக்கலவரம் என்று கூறப்படும் சிங்களவர்களும் முஸ்லீம்களுக்கும் இடையிலான வர்த்தகப் பிணக்கின் போது மூண்ட கலவரத்தை ஆங்கிலேயர் கடுமையாக அடக்கினர். இதன் போது பாதிக்கப்பட்ட சிங்களவருக்காக லண்டன் மாநகரம் சென்று வாதாடியவர் பொன்னம்பலம் இராமநாதன். இவர் இறுதியில் சிங்கள அரசியலிலிருந்து விலகி யாழ்ப்பாணம் வந்து கல்வியையும் சைவசமயத்தையும் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தினார்

ஆங்கிலேயர் இங்கு புகுத்திய அரசியல் வளர்ச்சி முறை

ஆங்கிலேயர் இங்கு புகுத்திய அரசியல் ஆட்சிமுறையின் வளர்ச்சி வித்தியாசமானது. தாங்கள் புகுத்திய அரசியல் முறையில் பல நச்சு விதைகளை விதைதத்து விட்டே சென்றனர். 1833ஆம் ஆண்டு கோல்புறூக் காலத்தில் தொடங்கி 47ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் திட்டம் வரை இவற்றை நாம் பார்க்கலாம். இலங்கையர்க்கும் ஆட்சியில் பங்கு பற்ற வாய்ப்பு அளிப்பதாகக் கூறி இவர்கள் உருவாக்கிய அரசியல் சீர் திருத்தங்கள் பெரும்பான்மை சிறுபான்மை மோதலைத் தூண்டி விடவும் சிங்களவர்களிடையே கண்டிச்சிங்களவர், கரையோரச்சிங்களவர், என்ற பிரிவினை வளர்க்கவும் வழிவகுத்தனர். தமக்கு ஆதரவான ஒரு மேட்டுக்குடி வகுப்பினை உருவாக்கி அதன்முலம் தமது நிர்வாகத்தை நடத்தித் தமது நலன்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இலங்கையில் உருவான இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்த தேசியவாதிகள் மேட்டுக்குடி அரசியல் சீர் திருத்தவாதிகள் என்கின்ற இரண்டு பிரிவினரை இவர்கள் பயன்படுத்தினர். தேசியவாதிகள் தேசியவிடுதலையை விரும்பும் அதே சமயம் மாற்றுப் பிரிவினர், அல்லது பழமை பேரினவாதிகள் பேச்சுவாழ்த்தைகள் மூலம் ஆங்கிலேயரிடமிருந்து தமக்குக் கூடிய அதிகாரங்களைப் பெற்று, அவர்களின் கீழ் செயற்பட விருப்பம் கொண்டார்கள். இவ்விரண்டு பிரிவினரின் வேறுபாடுகளை ஆங்கிலேயர் தமக்குக் சாதகமாக்கிக் கொண்டனர். அதனை நாங்கள் 1924ஆம் ஆண்டு மனிங் என்பவரின் அரசியல் திட்டத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்.பலமான அரசியல் சக்தியாக இலங்கைத் தேசிய காங்கிரஸ் வளர்வதைத் தடுப்பதற்காகக் கண்டியர்களையும், தமிழர்களையும், தமக்கு சாதகமாகப் பயன்படுத்தினர். இவைவழியான தேர்தல் தொகுதி முறையைக் கொண்டு வந்தனர். அதேபோல பிரதேச வாரியான தேர்தல் தொகுதி முறையைக் கொண்டு வந்து மேட்டுக்குடி சிங்களவர், தமிழர்களிடையேயும் பிளவுகளையும் உருவாக்கினர். புதிய அரசியல் திட்டங்களில் தமிழருடைய செல்வாக்கு குறைந்ததனால் தமிழ்த்தலைவர்கள் முரண்படத் தொடங்கினர். இதனால் அருணாசலம் பதவி விலகினார். அதுபோலவே கண்டிய சிங்களவர்களும் தமக்கு கூடிய அதிகாரம் கோரி கண்டிய பிரச்சனைகளுக்கு சமஸ்டி அமைப்பே தீர்வைத்தரும் எனக் கூறினர். இதனை அப்போது இருந்த சிங்களத் தலைவர்கள் எதிர்த்தனர். (S.W.R.D பண்டாரநாயக்கா மட்டும் இதனை ஆதரித்தார்.) இவ்வாறாக ஆங்கிலேயரின் பிரித்தாளும் தந்திரம் வேலைசெய்யத் தொடங்கியது. 1911ம் ஆண்டு இலங்கையில் ஆங்கிலக் கல்வி கற்றோர் கரையோர சிங்களவரில் 3.5 விழுக்காடாகவும் தமிழரில் 3.1விழுக்காடாகவும் இருந்தது. இந்த இரண்டு பகுதி மக்களையே ஆங்கிலேயர் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினர். அத்தகைய பழமைபேண் வாதிகளுக்குமாறாக தேசியவாதிகளும் யாழ்ப்பாணத்தமிழரிடையே தோற்றம் பெற்றனர். 1924ம்ஆண்டு யாழ்ப்பாணத்தில் ஒரு புதிய அமைப்பொன்று தோற்றுவிக்கப்பட்டது. மாணவர் காங்கிரஸ் என்கின்ற பெயரில் வறண்டி பேரின்பநாயகம், எஸ் நடேசன், எம்.பாலசுந்தரம், நாகையா போன்றோரால் உருவாக்கப்பட்டது. இவர்களது நோக்கம் அந்;நியரிடமிருந்து விடுதலை பெறல், இனவாதத்தினை இல்லாதொழித்தல், தமிழரிடையே தீண்டாமையை ஒழித்தல், தமிழ்மொழியை வளர்த்தல். இவர்கள் இலங்கையிலே முதன்முறையாக 1924ம் ஆண்டும், 1913ம் ஆண்டும் நடாத்தப்பட்ட தேர்தல்களைப் புறக்கணிப்புச் செய்தனர். 24ம் ஆண்டு மனிங் என்பவரின் திட்டப்படி நடைபெற்ற சட்டசபைக்கான தேர்தலையும் பின் 31ம் ஆண்டு டொனமூரின் திட்டப்படி நடைபெற்ற அரசாங்க சபைக்கான தேபுதலையும் பயனற்றவை எனக் கூறி புறக்கணிப்புச் செய்தனர். அதே சமயம் ஆறுமுகநாவலர் போன்றோர் ஆங்கிலேயரின் அந்நிய செல்வாக்கு பரவுவதைத் தடுக்கும்முகமாக சைவசமய தமழ் மொழி வளர்ச்சிக்காக இன்னொரு வகையில் முயன்றனர். மனிங் சீர்திருத்தங்களின் பின்னர் பிரதேசவாரியாக பிரதிநிதித்துவ முறை புகுத்தப்பட்டமையால் அதுவரை காலமும் பெரும்பான்மை இனமாகவே தங்களை மாற்றிவந்த தமிழ்த்தலைவர்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக நினைத்தனர். அப்போது சிங்களத்தலைவர்கள் மேல்மாகாணத்தமிழர்களுக்கு ஒரு பிரதிநிதியை அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியை மீறினர். இதனைத் தொடர்ந்தே அருணாசலம் இராமநாதன் போன்றோர் தேசியகாங்கிரசிலிருந்து விலகினர். இதுபோலவே பின்னர் 1931ம்ஆண்டு டொனமூர் பரிந்துரைகளின் பின்னர் சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டு இலங்கை 50 தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அரசாங்க சபையென்று ஒரு அமைப்பும் 7 துறைகளுக்குப் பொறுப்பான தற்போதைய அமைச்சரவைக்கு முன்னோடியான நிர்வாகக்குழு அமைப்பு முறையொன்றும் கொண்டு வரப்பட்டது. இந்தப் புதியமுறையின் கீழும் தமிழ் மக்களுடைய அடிமைத்தனத்திற்கான அத்திவாரம் இடப்பட்டது. வடக்கிற்கு 4 தொகுதிகள் கிழக்கிற்கு 20 தொகுதி மட்டுமே தமிழருக்குக் கிடைத்தது. அதுமட்டுமன்றி 7 நிர்வாகக்குழுத்தலைவர்களும் முற்றிலும் சிங்களவர்களாகவே இருந்தனர். இந்த முறையில் விவசாயத்துறைக்குப் பொறுப்பாகவிருந்த பொன் ஸ்ரீபன் சேனநாயக்க திட்டமிட்ட சிங்களக் குடியேற்ற செயற்பாடுகளைத் தொடங்கினார். பட்டிப்பளை எனப்படும் கல்லோயா குடியேற்றத் திட்டத்திற்கான தொடக்கம் இக்கட்டத்திலேயே நிகழ்ந்தது. பின்னர் சோல்பரியினுடைய பரிந்துரைகளின் படி இலங்கைக்கு ஆணிலப்பத அந்தஸ்து (டொமினியன்) வழங்கப்பட்டு பிரித்தானிய நாடாளுமன்ற சனநாயக முறையைப் பின்பற்றி (வெஸ்ட்மினிஸ்ர்முறைமை) மேற்சபையும் கீழ்ச்சபையையும் கொண்ட ஒரு நாடாளுமன்றமும், பிரதமமந்திரியைத் தலைவராகக் கொண்டஒரு முறையையும் புகுத்தப்படுகிறது. இலங்கை 95 தேர்தல் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஏறத்தாழ 50லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றனர். புதியமுறையின் கீழ் தமிழர் சார்பாக தமிழ்காங்கிரஸ் கட்சி 47ம் ஆண்டு நடந்த முதல்தேர்தலில் 9 இடங்களை மட்டுமே பெறுகின்றது. இன்றிலிருந்து பெரும்பான்மை சிறுபான்மை என்கின்ற மோதல் படிப்படியாக வலுக்கத் தொடங்குகின்றது.

No comments: