Monday, November 20, 2006

இலங்கையில் மைலையக தமிழ் சகோதரர்களின் வரலாறு

மலையக மக்கள் வரலாறு
1981ம் ஆண்டு சனத்தொகை கணக்கெடுப்பின் படி இலங்கையில் 8, 26,233 மலையக மக்கள் வாழ்ந்து வந்தனர். இது தொத்த சனத்தொகையில் 5.6 விழுக்காடாகும். சனத் தொகையில் 4வது இடம் ஆனால் 1911ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5, 30, 000 மலையகமக்கள் 12,.9 விழுக்காடு. சனத்தொகையில் 2வது இடம் இந்த நிலை 1965ஆம் ஆண்டுவரை நீடித்தது. இதற்குக் காரணம் இவர்கள் கட்டாயமாக இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டதேயாகும். இதன் காரணமாக இலங்கையில் மொத்தத் தமிழர் தொகையே குறைந்தது. எடுத்துக்காட்டு:
ஆண்டு சிங்களவர் தமிழர்
1971 66 % 32 %
1981 72 % 27 %
ஆங்கிலேயர் 1820ம் ஆண்டுகளின் பின்னர் தாம் இலங்கையில் புதிய பணிபுரிவதற்குத் தென்னிந்தியத் தமிழ் மக்களை ஏமாற்றி அழைத்து வந்தனர். குறிப்பாக பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை முறையில் குறைந்த வேதனத்தில் தொழிலாளிகளாக மதுரை, திருநெல்வேலி , இராமநாதபுரம் , தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் அப்போது நிலவிய கடுமையான பஞ்சத்தைப் பயன்படுத்தி வறுமையில் வாடிய மக்களை இங்கு அழைத்து வந்தனர். இங்கு மட்டுமல்ல பர்மா, மலேசியா , மேற்கிந்தியத் தீவுகள் , பிஜித்தீவுகள் போன்ற இடங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டனர். இங்கு வந்த மக்கள்பட்ட துயரங்கள் கணக்கற்றவை. இராமேஸ்வரத்திற்கு நூற்றுக்கணக்கான மைல் நடந்து வந்து பின்னர் தலைமன்னாரிலிருந்தும் கால் நடையாகக் கொண்டு செல்லப்பட்ட இம்மக்கள் தமது பயணத்தின் பொழுது மலேரியா போன்ற தொற்று நோய்களுக்கு ஆளாகிப் போதிய உணவின்றி 40 வீதம் வரை மடிந்தனர். 1823ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட 1வது கோப்பித் தோட்டத்தில் (கம்பளையில் சிங்கப்பிட்டிய) 14 மலையகத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பின்னர் கோப்பிக்கு ஏற்பட்ட நோயொன்றின் காரணமாக அது வீழ்ச்சியடைய 1867ம் ஆண்டு ஜேம்ஸ் ரெய்லர் தேயிலைப் பயிர்ச்செய்கையை இலங்கையில் ஆரம்பித்தார். இதன் பின்னர் மலையக மக்களின் தொகை வெகு வேகமாக அதிகரித்தது. 1827ம் ஆண்டு 10,000 ஆக இருந்த தொழிலாளர் தொகை 1877ம் ஆண்டு 1,45,000 ஆக அதிகரித்தது. 1933ம் ஆண்டுவரை பல இலட்சக்கணக்கான மக்கள் இங்கு வந்து சேர்ந்தனர். இவ்வாண்டின் பின்னர் இந்திய அரசு இலங்கைக்குத் தொழிலாளர் அனுப்பப்படுவதைத் தடைசெய்தது. 1931ம் ஆண்டு 1,00,000 மலையக மக்கள் வாக்குரிமை பெற்றிருந்தனர். மு .நடேசு ஜயர் எனப்படும் மலையக மக்களின் முதற் தொழிற்சங்கத் தலைவர். அத் தேர்தலிலே தெரிவு செய்யப்பட்டார். 1947ம் ஆண்டு சோல்பரி திட்டத்தின்படி நடந்த 1வது நாடாளுமன்றத் தேர்தலில் 7 மலையகத் தமிழ்ப் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர். மேலும் 20 தேர்தல் தொகுதிகளில் இடதுசாரிகள் வெற்றி பெறுவதற்கு இம்மக்களது வாக்குகளே தீர்மானிக்கும் சக்தியாக இருந்தன. தேர்தலில் வலதுசாரி தொழிலாளியக் கட்சியான ஜ. தே. க 93 இடங்களில் 42 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. இதனால் தமது நலன்கள் பாதிக்கப்படும் என அச்சமடைந்த ஜ. தே. க மலையக மக்களின் வாக்குரிமையைப் பறிப்பதற்குத திட்டமிட்டது. 1948ம் ஆண்டு சுதந்திர இலங்கையின் தமிழ்மக்கள் மீதான 1வது ஒடுக்குமுறைச் சட்டமாக இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்குத் துணயாக 49ம் ஆண்டு இன்னும் 2 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. 1949ல் இந்தியர், பாக்கிஸ்தானியர் பிரசாவுரிமைச் சட்டம் 1949ல் தேர்தல் திருத்தச்சட்டம் எனவே அவையாகும். 1948ம் ஆண்டு இலங்கைப் பிரசாவுரிமைச் சட்டம் மிகக் கொடிய மனிதவுரிமை மீறல்ச் சட்டமாகும்.. 48ம் ஆண்டு மாசிமாதம் 4ம் திகதி வரை எல்லாருமே பிரித்தானியப் பிரசைகளாகக் கருதப்பட்டனர். ஆனால் இதன்பின் மலையக மக்கள் தாம் இலங்கைப் பிரசை என்பதை நிரூபிக்க வேண்டியேற்பட்டது. சிங்களப் பெயரை உடையவர் இலங்கைப் பிரசையாக ஏற்றுக் கொள்ளப்படும் பொழுது தமிழ், முஸ்லீம் பெயரையுடைய இம்மக்கள் இலங்கைப் பிரசைகளாகக் கருதப்படவில்லை. இதன் பின்னர் மலையக மக்கள் தாம் இலங்கைப் பிரசை என்பதை நிரூபிக்கவேண்டி ஏற்பட்டது. அவர்கள் தமது தந்தை ழு ச தந்தைவழிப்பாட்டன் இலங்கையில்ப் பிறந்ததை நிரூபித்தல் வேண்டும். அக்காலகட்டத்தில் பிறப்புச் சான்றிதழ் பதிவு செய்யும் வழக்கம் இம்மக்களிடையே இருக்கவில்லை. இச்சட்டத்தை இப்போதைய தமிழ்த் தலைவர்களான பு. பு. பொன்னம்பலம் , சுந்தரலிங்கம் போன்றோர் ஆதரித்தனர். சிங்கள இடதுசாரிக் கட்சியினரும் வெறுமனே பேச்சளவில் எதிர்த்தனரே அன்றி வேறெதுவும் செய்யவில்லை. தந்தை செல்வா மட்டுமே இன்று அவர்களுக்கு நாளை எங்களுக்கு என்று கூறி பொன்னம்பலத்தின் கட்சியிலிருந்து பிரிந்து 49ம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியை ஆரம்பித்தார். பிரசாவுரிமை பறிக்கப்பட்டபின்னர் 49ம் ஆண்டு தேர்தல் திருத்தச் சட்டமூலம் மலையக மக்களது வாக்குரிமையும் பறிக்கப்பட்டது. பிரசாவுரிமைச் சட்டப்படி 1951ம் ஆண்டில் 8,25,000 பேருக்குப் பிரசாவுரிமை கோரி விண்ணப்பித்தனர். 62ம் ஆண்டு வரை ஏறக்குறைய 11 வருடங்கள் கழிந்த பின் 1,34,000 பேருக்கு மட்டுமே அதாவது விண்ணப்பித்தவர்களில் 16 விழுக்காட்டினருக்கு மட்டுமே பிரசாவுரிமை வழங்கப்பட்டது. எனவே இவ்வாறாக முதலில் வம்சாவளி மக்கள் என அழைக்கப்பட்டவர்கள் இப்பொழுது நாடற்ற மக்கள் என்று அழைக்கப்படலாயினர்.

மலையக மக்களிடையே தொழிற் சங்க இயக்கம்.

மலையக மக்கள் மத்தியில் தொழிற் சங்க அமைப்பை முதலில் தோற்றுவித்தவர் கே. நடேசுஐயர் ஆவார். அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற அமைப்பை முதலில் தோற்றுவித்தனர். அது போலவே இலங்கை சமசமாசக்கட்சி அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தை ஆரம்பித்தது. இவர்களோடு நடேசனும் இணைந்து போராட்டங்கள் வேலை நிறுத்தங்கள் என தொழிற்சங்க நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டனர். முதன் முறையாக 1940ம் ஆண்டு பதுளையில் மேதினத்தைக் கொண்டாடினர். இக் காலகட்டத்திலே கேவா கெட்டப்பகுதி, முல்லோயாத் தோட்டத்தில் வேலை நிறுத்தத்தின் பொழுது பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு கோவிந்தன் என்ற தொழிலாளி மரணமானார். என்றாலும் இடது சாரிகளின் தொழிற்சங்கம் 1942ம் ஆண்டு ஆங்கிலேயரால் தடை செய்யப்படடது. இந்திய எதிர்ப்பு உணர்வு இங்கு வளர்ந்த போது அதுபற்றிப் பேசுவதற்காக இலங்கை வந்த ஜவஹர்லால் நேரு அவர்களின் ஒத்துழைப்பால் இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமது தேசிய இயக்கமாக 39ஆம் ஆண்டு இலங்கை இந்தியக் காங்கிரஸ் என்கின்ற அமைப்பை உருவாக்கினர். இவர்கள் திரு பெரியசுந்தரம் தலைமையில் தொழிற்சங்க அமைப்பையும் தொடங்கினர். இவர்களது செல்வாக்கிற்கு முன்னாள் நடேசஜயர் தோல்வியைத் தழுவினார். இத்தொழிற் சங்கமே 1950களில் தொண்டமான் தலைமையில் இலங்கைத் தொழிலாளர்காங்கிரஸ் (D,W,C) என்று பெயர் மாற்றம் பெற்றது. தொண்டமான் ஏனைய எல்லா அமைப்புகளையும் விட மலையக மக்களுடைய தேசீய உணர்வை திறமையாகப் பயன்படுத்தினார். அத்தோடு தனது தொழிற்சங்க அமைப்பைப் பெரிதாகக் கட்டியமைத்து பணபலம் நிரம்பிய ஒரு தொழிற் சங்க சாம்ராஜ்யமாக்கினார். இவரது போக்குப் பிடிக்காமல் இ. தொ. கா. வின் செயலாளராக இருந்த ஜெனாப் ஏ. அசீஸ் 1956ஆம் ஆண்டளவில் பிரிந்து ஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற் சங்கத்தை உருவாக்கினார். இவரோடு ஊ.ஏ. வேலுப்பிள்ளை, நடேசன் போன்றோரும் பிரிந்து சென்றனர். அசீஸின் பின்னர் இ. தோ. கா. வின் செயலாளராக இருந்த வெள்ளையன் என்பவர் அதிலிருந்து வெளியேறி தேசிய தொழிலாளர் சங்கம் என்கின்ற புது அமைப்பைத் தோற்றுவித்தார். இதில் ஊ.ஏ. வேலுப்பிள்ளையும் சேர்ந்து கொண்டார். தமிழரசுக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் கழகம் என்ற தொழிற்சங்க அமைப்பை 62ஆம் ஆண்டளவில் உருவாக்கியது. எனினும் மலையக மக்களுக்கு இக்கழகம் அந்நியப்பட்டே இருந்தது. தொண்டமான் தமிழரசுக் கட்சித் தலைவர்களோடு தன்னை நெருக்கமாகக் காட்டிக் கொண்டதோடு இக் கழகத்தின் வளர்ச்சியும் முடிவுக்கு வந்தது. இன்று மலையகத்தில் தொண்டமானுடைய தொழிற் சங்கமும் ஐ. தே. .கவின் லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர்; சங்கமுமே பெரியவை. 20ற்கு மேற்பட்ட சிறு தொழிற்சங்கங்கள் அங்கு உள்ளன. இவை தமக்குள் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. என்றாலும் மலையக மக்களுடைய போராட்டங்களை ஐ. தே. க. அரசைப் பாதிக்காத வண்ணம் இன்றளவும் தொண்டமான் நடந்து வருகின்றார்

No comments: