Monday, November 20, 2006

சிங்களம் மட்டும் மொழிச் சட்டம்.

சிங்களவர்களுடைய அரசியல் வரலாற்றில் 1956ம் ஆண்டு மிக முக்கியமான ஆண்டாகக் கருதப்படுகின்றது. சிங்களத் தேசியம் அதனுடைய மொழி, பண்பாடு போன்றவை உரிய இடத்தைப் பெற்றதாகச் சிங்களவர்கள் கருதிக் கொள்ளுகின்றார்கள். ஒரு சமூக மாற்றம் நடைபெற்ற ஆண்டாக சிங்கள வரலாற்று ஆசிரியர்கள் 1956ம் ஆண்டைக் கணிக்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் 1956ம் ஆண்டு ஒரு மிக மோசமான ஆண்டாகும். சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதோடு முதல் இனக் கலவரம் நடைபெற்ற ஆண்டும் 1956.இவற்றுக்குக் காரணமானது 1956ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலேயாகும். இத் தேர்தலிலே மக்கள் ஜக்கிய முன்னனி (M.E.P) என்றொரு பெயரில் பண்டாரநாயக்கா மூன்று கட்சிகள் கொண்ட கூட்டனி ஒன்றை உருவாக்கினார். அவருடைய S. L.F.P கட்சியிலிருந்து பிரிந்து சென்ற பிலிப் குணவர்த்தன உருவாக்கிய V.S.S.P. எனப்படும் கட்சி மூன்று கட்சியுமாகும். இம் முன்னனி ஐ.தே. க. விற்கு முற்றிலும் புறம்பான கொள்கைகளை, சிங்களத் தேசியத்தை, மொழி, புத்தமதத்தை, சாதாரண சிங்கள மக்களை முன்னேற்றப் போவதாக கூறிக் கொண்டது. முதல் தடவையாகப் பிக்குகள் முன்னனி ஒன்றை உருவாக்கியது. களனி ரஜ மகாவிகாரையின் தலைமைக்குருவான புத்தரகித்தர தேரோ என்பவர் தலைமையில் இம் முன்னனி அமைந்தது. சிங்களம் மட்டும் மொழிச்சட்டத்தை 24 மணித்தியாலத்திற்குள் பதவிக்கு வந்தால் கொண்டு வருவோம் என்று கூறியதன் மூலம் தேர்தலில் 39.5 விழுக்காடு வாக்குகளைப் பெற்று மொத்தம் 95 தொகுதிகளில் 51 தொகுதியைக் கைப்பற்றியது. படுதோல்வி கண்ட ஐ. தே. க. 27 வீதி வாக்குகளைப் பெற்ற பொழுதும் 8 இடங்களையே பெற்றது. அதே சமயம் இரு மொழிக் கொள்கைக்கு எதிராக பெரும் போராட்டங்கள் நடத்தப் போவதாகக் கூறிய சமஷ்டிக் கட்சி 10 இடங்களைப் பெற்றது. தமிழ் காங்கிரசிற்கு 01 இடந்தான் கிடைத்தது.

பதவியேற்றவுடன் பண்டாரநாயக்கா 1956ம் ஆண்டு யூன் மாதம் 5ம்திகதி சிங்களம் மட்டும் மொழி மசோதாவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதனை ஐக்கியதேசியக் கட்சியும் ஆதரித்தது. தொடக்கத்தில் நியாயமான அளவு தமிழ் மொழிப் பயன்பாட்டிற்கு இம்மசோதாவில் இடமளிக்க பண்டாரநாயக்கா விரும்பிய பொழுதும் பிக்குகள் முன்னனி எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. இச் சட்டம் கரையோரச் சிங்கள மக்கள் தங்கள் பொருண்மிய சீர் கேடுகளுக்கு தமிழர் ஆங்கிலம் கற்று அரசாங்கப் பதவிகளில் அதிகம் இருக்கும் தமிழரே அடிப்படைக் காரணம் என்கின்ற இனவாத நோக்கில் மேற்கொள்ளப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். அன்றைய தினமே (5ம் திகதி ) செல்வநாயகம் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது காந்தி பின்பற்றிய சாத்வீக (அகிம்சை) வழிகளில் நாடாளுமன்றத்திற்கு முன்னே களனி முகத்திடலில் 300 பேர் கொண்ட சத்தியாக்கிரகம் எனப்படும் அமைதி வழியிலான எதிர்ப்பில் ஈடுபட்டது. அன்றைய தினமே பிக்குகள் முன்னனி காலணி முகத்திடலுக்கு ஊர்வலமாக வந்து அங்கேயிருந்த தமிழ்த் தொண்டர்கள் மீது வன்முறைப் பிரயோகம் செய்தது. பலரைத் தாக்கி, சிலரைத் தூக்கி நாடாளுமன்றத்திற்கு அண்மையிலுள்ள பெய்ரா ஏரியில் போட்டனர். இவ்வளவு நடந்தபின்னும் சிங்களப் பொலீஸ்துறை பார்வையாளராக நின்றது

No comments: